உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

 ஆஸ்துமா 'சுவாச மண்டலத்தின் சிக்கலாகக் கருதப்படும் ஆஸ்துமா நோயானது, நெஞ்சுப் பகுதியில் இறுக்கத்தையும், மூச்சு விடுதலின்போது சிரமத்தையும் கொடுப்பதுடன், இருமல் மற்றும் சுவாசத்தின்போது சத்தத்தையும் வெளிப்படுத்துகிறது. நுரையீரலிலுள்ள சிறு சிறு காற்றுக் குழல்கள் சளியினால் அடைபடுவதால், ஆஸ்துமா நோயாளிகள் மூச்சை உள்ளே இழுப்பதைவிட, வெளியே விடும்போதுதான் அதிக சிரமத்திற்குள்ளாகிறார்கள். மழை மற்றும் பனிக்காலங்களில் இந்த அறிகுறிகள் மேலும் அதிகரிக்கும். ஆஸ்துமா நோய் ஏற்படக் காரணங்களாக உணவு ஒவ்வாமை, தூசு, பருத்தி, பூக்களின் மகரந்தம், விலங்குகளின் ரோமம், பழைய தாள்கள், மருந்துகள், வாசனைப் பொருட்கள், பூஞ்சை ஆகியவைகள் கூறப்படுகிறன்றன.

உணவைப் பொருத்தவரையில் ஐஸ் கிரீம், சாக்லேட், கோதுமை, முட்டை, பால், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவைகளும் ஆஸ்துமா நோய் வருவதற்கும், நோய் இருப்பவர்களின் அறிகுறிகளை அதிகப்படுத்துவதற்கும் காரணங்களாகும். ஒவ்வாத உணவுகள் என்று பொதுவாக சில உணவுகளைக் குறிப்பிட்டாலும், அனைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்கும் அனைத்து உணவுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட பின்பு மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் முட்டை எவ்விதத்திலும் ஒவ்வாமையை ஏற்படுத்தாது. அதேபோன்று வேறொரு ஆஸ்துமா நோயாளிக்கு முட்டை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆனால் ஐஸ்கிரீமை அவர் உடல் ஏற்றுக்கொள்ளும். எனவே, நோயுள்ளவரின் உடல் எடை குறைவாக இருக்கும் தருணத்தில், பால், முட்டை, பருப்புகளால் ஒவ்வாமை இல்லையெனில், அவர் தாராளமாக அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நோய்க்கான தீர்வாக, அறிகுறிகளை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதுடன் பிற காரணிகள் நோயாளிகளை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுவாச மண்டலம் மற்றும் நுரையீரலை உறுதிப்படுத்தும் உணவுகளை உட்கொள்ளுவதுடன், இரத்தத்தில் நச்சுப்பொருட்கள் இல்லாமலும், செரிமான மண்டலத்தில் மலச்சிக்கல், வயிறு உப்புசம், வாயுத்தொல்லைகள் இல்லாமலும் இருப்பதற்கு வழிவகைகள் செய்துகொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதுடன் முறையான மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா போதுமான அளவிற்கு நிவாரணத்தைக் கொடுக்கும்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகள், செயற்கை நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அரிசி, பருப்பு, தயிர், சர்க்கரை போன்றவை சரியாக செரிக்காத நிலையில் அதிக சளியை உண்டாக்கி விடுவதால், நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, இவ்வகை உணவுகளை தவிர்க்கலாம்.

நோயின் தாக்கம் இல்லாதபோது, நோயாளிகளின் வயதுக்கும் எடைக்கும் எந்த அளவு உணவுப் பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனவோ, அதே அளவிற்கு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆஸ்துமா அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒவ்வாத உணவுகளை மட்டும் தவிர்க்க வேண்டும். மருத்துவம் செய்த பின்னர் நோயின் தாக்கம் ஓரளவு குறைந்ததுபோல் இருந்தாலும், அச்சமயம், மாமிச உணவுகள், காரம், புளிப்பு, அதிக சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் முழு நிவாரணம் கிடைக்கும். ஒருநாள் உணவை கட்டாயமாக மூன்று வேளைகளில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், சிறிது சிறிதாக ஐந்து அல்லது ஆறு வேளைகளாகப் பிரித்து உண்ணலாம்.


Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post