மழைநீர் சேகரிப்பு:
மழைநீரை மாடி அல்லது கூரை மேற்பரப்பில் இருந்து சிறு குழாய்கள் மூலம் எடுத்து சென்று வீடு, அலுவலகம், உயர்ந்த கட்டிடம், மற்றும் பெரும் வளாகத்திற்கு அருகில் ஒரு குழியை தோண்டியோ அல்லது ஏற்கனவே அமைந்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் செலுத்தியோ மழைநீரை சேமிக்கலாம்.
தெரிந்துக்கொள்ளுங்கள்
சராசரியாக பெய்யும் மொத்த மழை அளவில் 40 சதவீத மழைநீர் கடலிலும், 35 சதவீத மழைநீர் வெயிலால் ஆவியாகியும், 14 சதவீத மழைநீர் பூமியால் உறிஞ்சப்படும், மற்றும் 10 சதவீத மழைநீர் மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மழைநீரை சேகரிப்பதன் அவசியம்:
நகரமயமாதல் காரணமாக ஏற்படும் சாலைகள், பெரும் கட்டிடங்கள் போன்றவையால் பெய்யும் மழைநீரில் 5 சதவீதம் மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுகிறது. மேலும் இதனால் நிலத்தடி நீர் வளம் குறைந்து கடல் நீர் உட்புகள் அதிகமாகிறது. இதன் விளைவாக குடிநீர் பஞ்சம் மிகவும் மோசமாக ஏற்படும் அபாயம் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. எனவே கிடைக்கும் மழைநீரை அவ்வப்போது சேமிப்பதன் மூலம் வரும் காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
சேகரிக்கும் முறைகள்:
- உறுஞ்சுக் குழிகள் மூலம் மழைநீர் சேகரித்தல்.
- பொது இடங்களில் மழைநீரை சேகரித்தல்.
- நிலத்தடி நீர் செறிவு குழிகள்.
உறுஞ்சுக் குழிகள்:
பெரும் நகரங்களில் எங்கு பார்த்தாலும் சாலைகளும் கட்டிடங்களும் மட்டுமே காணப்படும். இந்த மாதிரி சூழலில் பெய்யும் மழைநீர் நிலத்தை அடைவது என்பது சாத்தியமற்றது.
எனவே கட்டிடங்களை சுற்றி 3 அடி ஆழமும் 12 அங்குலம் அகலமும் உள்ள குழிகளை பரவலாக தோண்டி அதில் சிறு கூழாங்கற்களையும் மணலையும் நிரப்பி அதற்க்கு மேல் ஒரு சிமெண்ட் அல்லது துளைகள் கொண்ட இரும்பு மூடி கொண்டு மூடி விடவும் .
ஒரு கிரவுண்ட் இடத்தில மூன்று அல்லது ஆறு குழிகள் வரை போடுவதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதோடு நீர் தேங்குவது குறைந்து உங்களை சுற்றி ஆரோகியமான சுற்றுப்புறம் உருவாகும்.
இவ்வாறு செய்வதால் ஒரு வற்றிய கிணற்றில் நீர்மட்டம் உயர 2 வருடங்கள் வரை ஆகும்.
தெரியுமா?
இந்தியாவில் தமிழ்நாடு தான் முதன்முதலாக கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் ஆகும்.
அறிமுகப்படுத்திய ஆண்டு: 2001
அறிமுகம் செய்தவர் : முதலமைச்சர். செல்வி. ஜெயலலிதா
பொது இடங்களில் மழைநீரை சேகரித்தல்:
பொது இடங்களில் மழைநீர் சேகரித்தல் என்பது மிகவும் முகியமானவை ஆகும். சாலைகள், தெருக்கள், மற்றும் மைதானங்கள் போன்ற இடங்களில் பெரும் அளவில் மழைநீர் கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்கும் மழைநீரை சாக்கடை கால்வாயில் கலக்காமல் தனியாக ஒரு கால்வாய் வழியாக எடுத்துச்சென்று ஏரி மற்றும் குளங்கள் அல்லது அருகில் உள்ள கிணறுகளில் விடுவதன் மூலம் மழைநீர் வீணாகச் சென்று கடலில் கலப்பது சாக்கடையுடன் கலந்து அசுத்தமாவது தடுக்கப்படுகிறது.
நிலத்தடி நீர் செறிவு குழிகள்:
நிலத்தடிநீர் செறிவு குழாய்கள் நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க செய்ய உதவுகிறது. செறிவு குழிகளை நாம் ஏரிகள், குளங்கள் மற்றும் வீடுகளின் அருகில் அமைக்கலாம். ஏரிகளின் அடிப்பகுதியில் உள்ள களிமண் சில பகுதிகளில் நீரை உறிஞ்சாமல் அப்டியே தடுத்து நிறுத்திக்கொண்டு இருக்கும் சமயத்தில் 2 அடி அகலத்தில் இருந்து 10 மீட்டர் வரை குழியை தோண்டி வைப்பதால் நிலத்தடிக்கு நீர் எளிதாக செல்லும். இதனால் அந்த பகுதிகளில் நிலத்தடியில் நீர்வளமும் அதிகரிக்கும்.
மழைநீரை சேகரிக்க வேண்டிய உணர்வு நம்மிடத்தில் அதிகரிக்க வேண்டும். மேலும் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.