நீர்மூழ்கி கப்பல் எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதன் தொழில்நுட்பம் | SciTamil

நீர்மூழ்கிக் கப்பல்

நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் (submarine) என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய, நீரூர்தி ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் என்னும் சொல் பொதுவான, பெரிய அளவிலான, மனிதர்களைத் தாங்கி செல்லவல்ல, தானியங்கு கலங்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இதே சொல் சிறிய உருவத்தில், தொலைக் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திர உணர்கருவிகள் கொண்டடக்கிய ஆராய்ச்சிக் கலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல் என்று தமிழ் மொழியில் அழைக்கப்பட்டாலும், பொதுவாக மற்ற மொழிகளில் இவை நீர்மூழ்கிப் படகு என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில், வரலாற்றுப் பார்வையில், இவை கப்பல்களில் இருந்தே நீரில் இறக்கப் பட்டுப் பயன்படுத்தப்பட்டமையால் இவை படகுகள் என்றே அறியப்படுகின்றன.
பரிசோதனைகளுக்காகப் பல நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு 19-ஆம் நூற்றாண்டிலே தொடங்கப் பட்டது. முதல் உலகப் போரில் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.

தொழில்நுட்பம்: 

ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை இடப்பெயர்ச்சி செய்தால் அப்பொருள் நீரில் மிதக்கும். நீர்மூழ்கிக் கப்பல்கள் நேர்மறை மிதக்கும் தன்மை கொண்டவை. நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப் படுகிறது. அதாவது, நீர்மூழ்கிக் கப்பகளின் எடை, அது இடப்பெயர்ச்சி செய்யும் எடையை விடக் குறைவு. நீரில் மூழ்க நீர்மூழ்கிகள், தம் எடையை கூட்ட வேண்டும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் குறைத்தல் வேண்டும். தம் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்மை சரளை தொட்டிகளை பயன்படுத்துகின்றன. நீர்மூழ்கிக் கப்பலின் முதன்மை சரளை தொட்டிகள் நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்கு காற்றினாலும், நீரில் மூழ்குவதற்கு நீரினாலும் அடைக்கப்படுகின்றன. இத்தொட்டிகளை தவிர சிறிய அளவில் ஆழத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், சிறிய அளவிலான ஆழக் கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks or DCT) பயன்படுத்தப்படுகின்றன.

வெளிச்சுவரின் கடினத்தன்மையைப் பொறுத்தே, நீர்மூழ்கிக் கலங்களின் மூழ்கும் ஆழம் மதிப்பீடு செய்யப்படுகிறது. நீரில் மூழ்கும்போது, நீர்மூழ்கிக் கப்பலின் வெளிச்சுவர் எஃகுவாயிருப்பின் நீர் அழுத்தம் சுமார் 4 மெகா பாஸ்கல் அளவு வரையிலும், டைட்டேனியமாயிருப்பின் 10 மெகா பாஸ்கல் அளவு வரையிலும் தாங்கக்கூடும். உள் அழுத்தம் மாறாமல் காக்கப்படுகிறது. இதைத் தவிர, மிதக்கும் தன்மையைப் பாதிக்கவல்ல பிற காரணிகளாக அறியப்படுவது, நீரின் உப்புத்தன்மை, நீர்மூழ்கியின் உள் அழுத்தம். நீர்மூழ்கிக் கப்பலை ஓரே ஆழத்தில் நிலை கொள்ள செய்ய ஆழக்கட்டுப்பாட்டுத் தொட்டிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்.

மற்றொரு இன்றியமையாத தேவை நீர்மூழ்கிக் கப்பலைச் சமதளமாக (கிடைநிலையாக ) நீருள் மிதக்கச் செய்தல். நீர்மூழ்கிக் கப்பல்கள் தாமாகவே கிடைநிலையில் நகரா. இதனைக் கையாள ஒழுங்குத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொட்டிகளிடையே நீர் சீராக செலுத்தப்படுவதால், நீர்மூழ்கியின் வெவ்வேறு பகுதியின் மாறுபட்ட எடை சமன்செய்யப் படுகிறது.

நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள்:

1950ஆம் ஆண்டுகள் முதல், அணுக்கருத்திறன் மூலம் இயக்கப் படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. கடல்நீரில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இவ்விரண்டு கண்டுபிடிப்புகளும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருள் பல மாதங்கள் தங்கியிருக்க வழி வகை செய்தன. மேலும், பல ஆயிரக்கண்க்கான கிலோமீட்டர்கள் நீருள் மூழ்கியபடியே பயணிக்க முடிந்தது. பல நெடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நீர்மூழ்கிக் கப்பலில் குடிநீர் ஆவியாக்கல் முறையிலோ, எதிர்ச் சவ்வூடு பரவல் முறையிலோ தயாரிக்கப்படுகிறது. இந்நீர், குளிக்க, குடிக்க, சமைக்க ஆகியவற்றிக்கு பயன்படுத்தப் படுகிறது. கடல்நீர் கழிப்பிடங்களில் பயன்படுத்தப் படுகிறது. அழுக்கு நீர் கழிவு தொட்டிகளில் அடைக்கப்பட்டு அழுத்தமூட்டப்பட்ட காற்றின் மூலம் சிறப்பு பீச்சான்கள் மூலம் கப்பலிருந்து வெளியேற்றப் படுகிறது.
உதாரணமாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் நாட்டிலஸ் வட துருவத்தை மூழ்கியபடியே கடந்தது.மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் டிரைடான் மூழ்கியபடியே உலகை ஒருமுறை வலம் வந்தது.ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பல வலிமையான அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கின. 
1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையான பனிப்போரின் அங்கமாக முதலாவது முறையாக எறிகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐக்கிய அமெரிக்காவால் ஜார்ஜ் வாஷிங்டன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும், சோவியத் ஒன்றியத்தால், ஹோட்டல் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும் பொருத்தப் பட்டன.
பல நவீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களில் மின்னாற் பகுப்பு முறையில் நீரிலிருந்து சுவாசிக்கத் தகுந்த ஆக்சிஜன் பெறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களுள் உள்ள காற்று கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையற்ற CO2 வளி நீக்கப்படுகிறது. 

Don't Miss 2 Year FREE Subscriptions + Ebooks in Tamil

Subscribe and Listen to Premium Tamil Audio Service without Ads (Premium Audio is currently available on the latest post for trial)

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *