நீரா – உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானம்.

நீரா – உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானம்.

நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட ஒரு பானம். இது மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம். ஆல்கஹால் இல்லாததால் உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானமாகும்.
தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களிலும் நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தென்னை விவசாயிகள் பலரும் நீண்ட காலமாகப் போராடிவருகிறார்கள்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சில நிபந்தனைகளுடன் தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
நீரா
இதுகுறித்து உடுமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் சேர்மன் நா.பெரியசாமி கூறியதாவது. “தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். வறட்சி மற்றும் விலைவீழ்ச்சி காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துவரும் தென்னை விவசாயிகளுக்கு நீராபானம் ஒரு வரப்பிரசாதம்.
தென்னை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் குடிப்பதற்கும் கருப்பட்டி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. இறக்கப்படும் பதநீரை அப்படியே வைத்திருந்தால் அது நொதித்து புளித்துபோய் போதை தரும் புளித்த கள்ளாக மாறிவிடும். ஆனால், நீரா என்பது புளிக்காத பதநீர். 9 டிகிரி செல்சியஸ் குளிரில் தொடர்ந்து வைத்திருக்கும் பதநீர்தான் நீரா. உள்ளுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்ட மண்கலயங்களை, சீவப்பட்ட தென்னை பாளைகளில் பொருத்தி அதில் வடியும் திரவம் பதநீராகும். சுண்ணாம்பு பூசப்படாத கலயங்களில் வடியும் திரவம் கள் எனப்படுகிறது. கள் இறக்கவும் விற்கவும் தமிழ்நாட்டில் தடையுள்ளது.
ஆனால், நீரா என்பது கள்ளுக்கும் பதநீருக்கும் இடைப்பட்ட பானம். தென்னை பாளைகளிலிருந்து வடியும் திரவத்தை மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக ஐஸ்பெட்டிகளில் சேகரிக்க வேண்டும். அந்தக் குளிர்நிலையில் இருந்தால் அதுதான் நீரா. குளிர்நிலை குறைந்தால் நீரா கள்ளாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. மனித உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது.
மேலும், தென்னை மரம் ஒன்றிலிருந்து மாதம் 2,000 ரூபாய்வரை வருமானம் கிடைப்பதால் குறைந்தபட்சம் 25 தென்னை மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரூ 50,000 வரை நிரந்தர வருமானம் கிடைக்கும்” என்றவர் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய உள்ள அரசாணையில் இருக்கும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டார்.
“தனிப்பட்ட முறையில் நீரா இறக்கி விற்பனை செய்ய யாருக்கும் அனுமதியில்லை. தென்னை வாரியத்தில் பதிவு செய்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நீரா இறக்கப்பட்டு, பதப்படுத்தி பாட்டில், கேன், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும். மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் உரிய உரிமம் பெற்று, தென்னை வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்களை ஆய்வு நடத்தி நீரா இறக்கி விற்பனை செய்யும் உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெறும் நிறுவனங்களில் உறுப்பினராகப் பதிவுசெய்துள்ள விவசாயிகளின் தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களில் இருந்தும் நீரா இறக்க முடியாது. மொத்தமுள்ள தென்னை மரங்களில் 5 சதவிகிதம் அளவில் மட்டுமே நீரா இறக்க அனுமதிக்கப்படும். நீரா வழங்கப்படும் உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டு முறைப்படி விண்ணப்பம் கொடுத்து புதிய உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
(அவ்வாறு 3 நிறுவனங்களுக்கு தமிழக அரசு உரிமம் கொடுத்துள்ளது )

Don't Miss 2 Year FREE Subscriptions + Ebooks in Tamil

Subscribe and Listen to Premium Tamil Audio Service without Ads (Premium Audio is currently available on the latest post for trial)

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *